கேமரன் மலையில் சிவராஜ்தான் வேட்பாளர்! இரண்டாம் இடத்தில் முருகையா, ராமலிங்கம்

கேமரன் மலையில் சிவராஜ்தான் வேட்பாளர்! இரண்டாம் இடத்தில் முருகையா, ராமலிங்கம்

கோலாலம்பூர், டிச. 26

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் மஇகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரன்தான். திடீரென அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து அக்கட்சி தீவிரமாக சிந்தித்து வருகின்றது.

முதல் தேர்வாக சிவராஜ் இருக்கும் நிலையில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில் அவரைப்போல திறம்பட செயல்படக் கூடிய மற்றொரு வேட்பாளரை அடையாளம் காணும் நடவடிக்கையில் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் களம் இறங்கி இருக்கின்றார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் உதவித் தலைவர் முருகையா, உமாராணி குழுமத்தின் தலைவர் ராமலிங்கம் ஆகியோரின் பெயர்கள் முதல் வரிசையில் இடம் பெற்றுள்ளன.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சிவராஜ் சந்திரனுக்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் மஇகாவின் உதவித் தலைவர் என்ற வகையில் முருகையா, போட்டியிடலாம் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

அத்தொகுதியில் போட்டியிட ராமலிங்கமும் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் அதேபோல் அத்தொகுதியில் மஇகா சார்பில் நிறுத்த உள்ளூர் வேட்பாளர் அடையாளம் காணப்படலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.

டான்ஸ்ரீ எஸ் விக்னேஸ்வரன் தலைமையில் மத்திய செயலவையில் பல இளைஞர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அந்த இளைஞர்களில் தகுதியான ஒருவர், அக்கட்சியின் சார்பில் போட்டியிட நிறுத்தப்படலாம் என கூறப்படுகின்றது.

14ஆவது பொதுத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவை பெற்று நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய போதும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் டத்தோ சிவராஜ். இத்தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மனோகரன் தோல்வி கண்ட நிலையில் இத்தொகுதியில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தேர்தல் நீதிமன்றத்தில் புகார் மனுவை வழங்கியிருந்தார்.

அந்த விசாரணையின் முடிவில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் நேரடியாக வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கவில்லை என்றாலும் அங்கு பணபட்டுவாடா நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. அதனால் தொகுதியின் தேர்தல் செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்து கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை காலியாக்கியது.

இந்நிலையில் வழக்கறிஞர் மனோகரன், சிவராஜ் மீது வழக்கு பதிவு செய்ததால் அவர் மீண்டும் கேமரன் மலை தொகுதியில் போட்டியிட முடியாது என சில கூறிவருகிறார்கள்.

ஆனால் மலேசிய தேர்தல் ஆணைய சட்டத்தின் கீழ் சிவச்சந்திரன் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என கூறப்படும் நிலையில் அவர் தான் அக்கட்சியின் சார்பில் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இதனிடையே கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதை தேசிய தலைவர் நிராகரித்து விட்டார். கேமரன் மலை நாடாளுமன்ற மஇகாவிற்கு சொந்தமானது. இத்தொகுதியில் சிவராஜ் சந்திரன் போட்டியிடுவார். அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக மற்றொரு வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்பது குறித்து இன்று கூடிய மத்திய செயலவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.