மகாதீர் உடன் கைகோர்ப்பது நியாயம்! பாஸுடன் இணைவது தவறா? டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி

மகாதீர் உடன் கைகோர்ப்பது நியாயம்! பாஸுடன் இணைவது தவறா? டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி

பாஸ் கட்சியுடன் மலேசிய இந்திய காங்கிரஸ் இணைந்து செயல்படும் என கூறிய அடுத்த கணமே சிலர் சமூக தளங்களில் இது குறித்து கேள்வி எழுப்புகின்றார்கள். தற்போது ஆளும் கட்சியாக இருப்பவர்கள் தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர் துன் டாக்டர் மகாதீர் உடன் இணைந்து பணியாற்றுவதில் நியாயம் இருக்கும் பட்சத்தில், பாஸ் கட்சியுடன் மலேசிய இந்திய காங்கிரஸ் இணைவதில் என்ன தவறு உள்ளது என அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சியாக இருந்து பழக்கப்பட்ட பாஸிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த புரிந்துணர்வு என்பது எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காது என அவர் மேலும் கூறினார்.

பாஸ் கட்சி குறித்து இது வரையில் நாங்கள் தவறான சிந்தனையை தான் கொண்டிருந்தோம். ஆனால் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் செயல்படும் மாநிலங்களில் எந்த ஆலயமும் உடைக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதோடு எந்த ஒரு சூழ்நிலையிலும் இதர இனங்களின் உரிமைகளை பறிக்க மாட்டோம் என்பதில் பாஸ் உறுதியாக இருக்கின்றது. அந்த வெளிப்படையான கூற்றுதான் இந்த நட்பு உழவிற்கு முதன்மை காரணம் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாஸ் உடன் இணைந்து செயல்பட்டவர்கள் இப்போது அவர்களை குறை கூறுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எது குறித்தும் வாய் திறக்காதவர்கள் இப்போது பேசுகிறார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை பாஸ் கட்சி சிறந்த முறையில் செயல்படுகிறது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மலேசிய இந்திய காங்கிரசின் தலைமையகத்திற்கு பாஸ் கட்சியின் தேசிய தலைவர் ஹடி அவாங் வருகை புரிந்து இருப்பது வரலாற்று நிகழ்வாகும். மஇகா இதுவரையில் இந்திய சமுதாயத்திற்காக எம்மாதிரியான நலத்திட்டங்களையும் சேவைகளையும் முன்னெடுத்தது என்பது குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இச்சூழ்நிலையில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பாடுபட்டது மஇகாதான் என்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

எங்களுடன் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டனர். கிளாந்தான் திரங்கானு ஆகிய இரண்டு மாநில ஆட்சி களைக் கொண்டிருக்கும் பாஸ் அங்கு இந்தியர்களின் பிரச்சினையை கவனிப்பதற்கு ம இ கா வின் பிரதிநிதிகளையும் நியமிப்பதற்கு தயாராக இருப்பதாக ஹடி அவாங் கூறினார்.

இது எங்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி என்றாலும் இதை எதிர்பார்த்து பாசுடன் நாங்கள் இணைந்து செயல்பட வில்லை என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார். கிளாந்தான் திரங்கானு ஆகிய மாநிலங்களில் இந்திய சமுதாயத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினையை மாநில அரசின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளும் தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் இன்னமும் எங்களை குறை கூறியே அரசியல் நடத்துகிறார்கள். மக்களின் நலத் திட்டங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும். எங்கள் கட்சியையும் எங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் நாங்கள் கவனித்து கொள்கிறோம். பாஸ் கட்சியுடன் இணைந்து இருப்பது நிச்சயம் மஇகாவிற்கு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.