இந்திய சமூகத்தின் அடிப்படை உரிமையை அரசியலாக்க வேண்டாம்! வித்யானந்தன் வலியுறுத்து

இந்திய சமூகத்தின் அடிப்படை உரிமையை அரசியலாக்க வேண்டாம்! வித்யானந்தன் வலியுறுத்து

ஜொகூர் பாரு மாவட்டத்தில் முக்கிம் சுங்கை திராமில் இந்திய சமூகத்தினர் ஈமச்சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட 1.09 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் நிராகரித்திருப்பதை ஜோகூர் மாநில ம.இ.கா தலைவர் இரா வித்யானந்தன் சாடினார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடப்பாட்டை தாம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி ஆட்சியின்போது இந்த நிலம் அடையாளம் காணப்பட்டு இதற்கான ஒதுக்கீடும் பாசீர்கூடாங் நகராண்மைக் கழகத்திற்கு வழங்கப்பட்டது .நவீன அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதற்கும் இந்திய சமூகத்தினரின் ஈமச்சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொருத்தமான இடமாக இது அடையாளம் காணப்பட்டது.

தற்போது இந்த நிலம் நிராகரிக்கப்பட்டது குறித்து மாநில அரசாங்கம் தெளிவான விளக்கம் வழங்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். ஒதுக்கப்பட்ட நிலம் மற்றும் அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடும் பாசீர்கூடாங் நகராண்மைக் கழகத்திற்கு வழங்கப்பட்டு விட்டது.அப்படி இருக்கையில் இந்த நிலத்தை நிராகரித்தது எந்த வகையில் நியாயம் .?

ஜொகூர் பாரு வட்டாரத்தில் அதிகமான மக்கள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்திய சமுகத்தை சேர்ந்தவர்கள் மரணம் அடைந்தால் அவர்களது இறுதி சடங்கை முறையாகவும் கௌரவமாகவும் செய்வதற்கு பொருத்தமான இடம் இல்லாமல் இருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஜோகூர் அரசாங்கம் வெளிப்படையான விளக்கத்தை இந்திய சமுகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என வித்தியானந்தன் கேட்டுக் கொண்டார். இந்திய சமூகத்தின் நியாயமான சமய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை மாநில அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்தில் பொறுப்பு வகிப்பவர்கள் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஈமச்சடங்கு நடத்துவதற்கு பொருத்தமான இடத்தை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினருமான வித்யானந்தன் வினவினார்.