தைப்பொங்கல் திருநாளை ஒற்றுமை பொங்கலாய் கொண்டாடுவோம்

தைப்பொங்கல் திருநாளை ஒற்றுமை பொங்கலாய் கொண்டாடுவோம்

தைப்பொங்கல் திருநாளை அனைவரும் ஒற்றுமை திருநாளாகக் கொண்டாடுவோம் என்று ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர் வே.குணாளன் தமது  பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொங்கல் திருநாள் மக்களை ஒன்றுபடுத்தும் ஒரு விழாவாகும். இந்த திருநாளை மக்கள் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும். இந்த ஒற்றுமை பல நன்மைகளை கொண்டு வரும். மக்கள் தங்கள் துயரங்களை மறந்து  புதிய விடியலை நோக்கி பயணிக்க வேண்டும் என்று குணாளன் தெரிவித்தார்.

தமிழர்கள் கல்வி, பொருளாதாரம், சமயம் ஆகியவற்றில் முன்னேற உறுதி கொள்ள வேண்டும். சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றையும்  கட்டிக்காக்க சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவையனைத்தும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றார் வே.குணாளன்.

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தமிழ்ப்புத்தாண்டில் மக்கள் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வர அனைவரும் பாடுபடுவோம். இந்த தைப்பொங்கல் நாளில் நமக்கு ஏற்படும் மாற்றமும் மகிழ்ச்சியும் எப்போதும்  இருக்க வேண்டும்.

இந்த தைப்பொங்கல் நாளில் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை பிரார்த்தனை செய்யும் அதேவேளையில் மலேசிய தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ம.இ.கா சிப்பாங் தொகுதி தலைவருமான வே.குணாளன் குறிப்பிட்டார்.