*மஇகா கட்சிக்குத் தற்சமயம் நல்லதோர் உறுமாற்றமே போதுமானது

*மஇகா கட்சிக்குத் தற்சமயம் நல்லதோர் உறுமாற்றமே போதுமானது

*பத்திரிகைச் செய்தி
டத்தோ வி.எஸ்.மோகன்
மஇகா தேசிய தகவல் பிரிவு தலைவர்
16 மே 2018

நடந்து முடிந்த 14-வது பொதுத்தேர்தல் இந்நாட்டின் வரலாறுக் காணாத திருப்புமுனையாக உருவாக்கியுள்ளது. மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு 60 ஆண்டுகால காரணியமாகத் திகழ்ந்தத் தேசிய முன்னணி பெற்றத் தோல்வியானது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. தேசிய முன்னணியின் கட்சிகளான அம்னோ, மஇகா, மசிச , கெராக்கான் மற்றும் இதரக் கட்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன.

2. ஆனால் ஒரு சிலர் மஇகா தான் தோல்வியைச் சந்திந்துள்ளாதாகவும் ஆதலால் இக்கட்சி இனி மீட்டெழ முடியாது என்றும் கருதி தவறான கூற்றினை பரப்புகின்றனர். மஇகா கட்சியின் பின்னணி என்பது 60 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. அவ்வளவு எளிதில் இக்கட்சியை அழித்திட முடியாது. இது நாள் வரை இத்தியர்களுக்காக குரல் கொடுத்தக் கட்சியும் மஇகா தான்.

3. மாற்றம் என்பது மாறாதது என்ற நிதர்சனத்தின் பிரதிபலிப்புதான் மக்களிடையே ஏற்பட்ட இந்த அரசியல் மாற்றமாகும். இந்தத் தேர்தல் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுக்கு நல்லதொரு படிப்பினையைத் தந்துள்ளது. அதன் வாயிலாக நாம் நமது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர தலைமைத்துவத்தினை முற்றாக மாற்றுவது சரியான தீர்வாகாது. அரசியல் கட்டமைப்பில் அனுபவமும் ஆக்கப்பூர்வமும் அதிமுக்கியமான கூறுகள். ஆக சிந்தித்துச் செயல்படுதலே நல்லதொரு தீர்வுக்கு வழி வகுக்கும்.

4. மாறாக தேசியத் தலைவரை பதவி விலகச் சொல்லும் சிலர் நன்றாகப் ஒரு விஷயத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது நமது தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் ச.சப்ரமணியம் அவரின் தலைமையையில் இக்கட்சி சிறப்பான முறையில் தான் செயல்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டுப் பதவிவகிக்கத் தொடங்கி இது நாள் வரை ஒரு கட்டுக்கோப்பான தலைமைத்துவத்தில் தான் செயல்பட்டார். பல பிரிவுகளாகப் பிரிந்துச் சென்றவர்களை எல்லாம் ஒன்றாய் இணைத்தார். அனைவருக்குள்ளும் ஒரே குரல் ஒன்றே இலக்கு என்ற உணர்வையும் விதைத்தார். ஏற்பட்ட பிழவுகள் யாவும் மறையத் தொடங்கி ஒன்றினைந்து செயல்பட்ட வேளையில் ஆழிப்பேரலையாய் மக்கள் மனமாற்றம் இம்முடிவினை காட்டியுள்ளது. அதற்கு நமது தலைவரை குறைக்கூறுவதுத் தவறாகும்.

5. நமது தலைவரின் தலைமைத்துவத்தில், அவர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும் என்ற நிலையில் இத்தோல்வியை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒன்றாய் செயல்பட வேண்டும். மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நன்கு ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 40 சதவிகித இளம் வாக்காளர்களை நாம் மஇகாவிற்கு எப்படிக் கொண்டுவர வேண்டும் என்றுத் திட்டமிட்டு வழிக்காண வேண்டும். மேலும் அந்த இளம் வாக்காளர்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளுக்கு ஏற்பக் கட்சியினை வழிநடத்த முன் வர வேண்டும். அதற்குத் தேவை நல்லதொரு உறுமாற்றமே தவிர தலைமைத்துவ மாற்றம் அல்ல.

6. ஆகவே நமது தேசியத் தலைவரின் தலைமையில் இக்கட்சி உறுமாற்றம் கண்டு இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்திட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆதலால், நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட்டால் மட்டுமே இக்கட்சியை வளம்பெறச் செய்ய முடியும் என்று ம.இ.காவின் தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் தெரிவித்தார்.