“இந்தியப் பெண்களின் மேலாண்மையும், மேம்பாடும்” டாக்டர் சுப்ராவுடன் கலந்துரையாடல்

“இந்தியப் பெண்களின் மேலாண்மையும், மேம்பாடும்” டாக்டர் சுப்ராவுடன் கலந்துரையாடல்

February 22, 2018

“மலேசியா போன்ற பல இன மக்கள் வாழும் ஒரு நாட்டில் சிறுபான்மை இனத்தவரான இந்தியர்கள் இதர இனத்தவர்களுக்கு ஈடாக வெற்றிப்பெற்ற சமூகமாக திகழ வேண்டுமானால் முதலில் தேவை ஒற்றுமை; அடுத்த தேவை நம்பிக்கை. நம் இனத்தில் ஒற்றுமையும், நம்பிக்கையும் வலுப்பெறுமானால் நாம் நமது இலக்கை அடைய முடியும்”என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை பிப்ரவரி 21-ஆம் தேதி பெட்டாலிங் ஜாயா, மாஹ்சா பல்கலைக்கழகத்தில் ம இ கா மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் “இந்தியப் பெண்களின் மேலாண்மையும், மேம்பாடும்” எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியச் சமூகம் பல கூறுகளாகப் பிரிந்து கிடக்குமானால், நமக்கு வேண்டியது கிடைக்காமல் போகலாம். எனவேதான், ம இ கா வின் தலைமைப் பொறுப்பை ஏற்றப் பின்னர் தாம் இந்தியர்களை ஒன்றுபடுத்தும் நோக்கில் “ஒரே குரல் – ஒரே இலக்கு” எனும் கருப்பொருளில் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு, பதவி உயர்வு குறைந்து வருவது குறித்து பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் இவ்வாண்டுத் தொடக்கம் இந்தியர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் உறுதியளித்துள்ளார் – இது நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.

நமது இன மாணவர்களுக்கு அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது என எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கும் டாக்டர் சுப்ரா பதிலளித்தார்.

 

இவ்வாண்டு தொடக்கம் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 7 விழுக்காடு வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். தகுதியுள்ள மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி கிடைப்பதை ம இ கா உறுதிச் செய்யும் எனவும் டாக்டர் சுப்ரா உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாஹ்சா பல்கலைக்கழக உரிமையாளர் டான்ஸ்ரீ ஹனிபா, ம இ கா மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி, மலேசிய தெலுங்கு அறவாரியத் தலைவர் டத்தோ ஆர். காந்தராவ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷாலினி ராஜாராம், தாதியர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.