“ஒற்றுமையின் மூலமே இந்தியர்கள் மாற்றம் காண முடியும்” – கோலசிலாங்கூர் தைப்பூச விழாவில் டாக்டர் சுப்ரா

“ஒற்றுமையின் மூலமே இந்தியர்கள் மாற்றம் காண முடியும்” – கோலசிலாங்கூர் தைப்பூச விழாவில் டாக்டர் சுப்ரா

February 01, 2018

“மலேசியாவில் சுமார் 22 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 7.2 அல்லது 7.3 விழுக்காடாகும். இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் பத்தாண்டு வியூக செயல்திட்டத்தை (மலேசியன் இந்தியன் புளுப்பிரிண்ட்) அமல்படுத்தி வருகிறது. இந்தியர்கள் மாற்றம் காண வேண்டுமானால் ஒற்றுமையை நாம் கடைபிடிக்க வேண்டும்” என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.

 

“ம இ கா மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் கடந்தாண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் இந்தியர்களின் ஒட்டு மொத்த மேம்பாட்டுக்காக புளுபிரிண்ட் பத்தாண்டு திட்டத்தை அறிவித்தார். அதனை முறையாக அமல்படுத்த பிரதமர் துறையின் கீழ் இந்திய பொருளாதார மேம்பாட்டுப் பிரிவான செடிக் பிரிவையும் அமைத்துள்ளார், ஆறு உட்பிரிவுகளையும் ஏற்படுத்தி தற்போது செடிக் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரதமரின் இம்முடிவானது தைரியமான ஒன்று என்பதோடு, இதுவரை இந்தியர்களின் மேம்பாட்டுக்காக எந்தப் பிரதமரும் செய்யாத ஒன்றாகும். எனவே அவரை இந்தியர்களின் மேம்பாட்டுத் தந்தை எனக் கூறுவதில் பெருமைப் படுகிறோம்” என சுகாதார அமைச்சருமான அவர் புகழாரம் சூட்டினார்.

 

நேற்று புதன்கிழமை (31.1.2017) தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில் டாக்டர் சுப்ரா இவ்வாறு தெரிவித்தார். டாக்டர் சுப்ராவுடன் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணியும் தைப்பூச விழாவிற்கு வருகை தந்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் கலந்து கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ சுப்பிரமணியம், கோலசிலாங்கூரில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் இருப்பதால், இந்த ஆலய வளாகத்தில் அமையவிருக்கும் இந்திய கலாச்சார மைய கட்டுமானப் பணிகளுக்குப் பிரதமர் தமதுரையில் அரசாங்க மானியமாக 15 லட்சம் ரிங்கிட்டை வழங்குவதாக அறிவித்திருப்பதற்கு தாம் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஓமார், கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இர்மோஹிசாம் இப்ராஹிம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.