இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் பிரதமர் நஜிப் சந்திப்பு

இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் பிரதமர் நஜிப் சந்திப்பு

December 19, 2017

இலங்கைக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை காலை வட மாகாணத்துக்கான முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் உடனிருந்தார்.

 

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட நஜிப், “இலங்கையின் வட காகாணத்துக்கான முதல்வர் மதிப்பிற்குரிய சி.வி.விக்னேஸ்வரனுடன் பயன்மிக்க சந்திப்பை நடத்தினேன். அந்த வட்டாரத்தின் மறுசீரமைப்பு மேம்பாடுகளுக்காகவும், அங்குள்ள தமிழ் சமுதாயத்தினரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும் ஆதரவு கொடுத்து இணைந்து பணியாற்ற நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறோம்” எனக் கூறியிருக்கிறார்.

 

இதற்கிடையில் தனது இலங்கை வருகை வெற்றிபெறக் கடுமையாகப் பாடுபட்ட தனது அரசாங்கக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலே காணும் இந்தப் படத்துடன் பதிவிட்டார். நஜிப்பின் இடது புறத்தில் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா…

பிரதமருடனான தனது இலங்கை வருகை மற்றும் இலங்கை வடமாகாணத்துக்கான முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட டாக்டர் சுப்ரா, யாழ்ப்பாணம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்புப் பணிகளில் மலேசியா எவ்வாறு உதவ முடியும் என்பதை ஆராய முதல் கட்டமாக மலேசிய அரசாங்கத்தின் அதிகாரத்துவக் குழு ஒன்றை அனுப்ப பிரதமர் பரிசீலிப்பதாக உறுதி கூறியுள்ளார் எனத் தெரிவித்திருக்கிறார்.