7 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி

7 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி

December 17, 2017

பேராக் தலைநகர் ஈப்போவில் உள்ள குனோங் ராப்பாட் தேசிய வகை புதிய தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் முழுமைப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் 2019 ஆம் கல்வி ஆண்டில் இங்குள்ள மாணவர்கள் புதியப் பள்ளியில், புதிய சூழலில், அதிநவீன கற்றல் கற்பித்தல் வசதிகளுடன் கல்வியைக் கற்கும் வாய்ப்பு ஏற்படும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (15 டிசம்பர் 2017) நடைபெற்ற குனோங் ராப்பாட் தேசிய வகை புதிய தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்புதிய தமிழ்பள்ளி குனோங் ராப்பாட் நகர்ப்பகுதியை ஒட்டி சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் ஏறத்தாழ ஏழு மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படவிருப்பதாக டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் பேசுகையில், “மலேசியாவில் சில இடங்களில் தமிழ்ப் பள்ளிகளை அமைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இப்பள்ளி அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இப்பள்ளியை நிர்மாணிப்பதற்கு முன்பு வேறொரு இடம் அடையாளம் காணப்பட்டது. அந்த இடம் தமிழ்ப்பள்ளி அமைப்பதற்கு ஏற்ற இடம் இல்லை என பெற்றோர்கள் மறுப்புத் தெரிவித்ததைத் தெடர்ந்து மாற்று இடம் அடையாளம் காணப்பட்டு  இந்து சமய முறைப்படி பூமிப் பூஜையும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

 

“இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் ம இ கா உள்ளது. அதனை நோக்கித்தான் நாங்களும் செயல்படுகின்றோம். எங்களுக்குத் துணையாக சமுதாயமும் தமிழ்ப் பத்திரிக்கைகளும் இருக்க வேண்டும். குறைகளை சுட்டிக் காட்டுவது தவறல்ல. ஆனால், தவறான தகவலை மக்களுக்குத் தெரிவிப்பது தவறாகும். எனவே, தமிழ்ப்பத்திரிகைகள் செய்தியினை நடுநிலையாக, நேர்மையாக, தர்மத்துடன், அதிக பொறுப்புடன் வெளியிட முன்வர வேண்டும்” என டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

குனோங் ராப்பாட் தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேராக் மாநில சபாநாயகர் டத்தோ எஸ். தங்கேஸ்வரி, கல்வி துணையமைச்சர் டத்தோ பி். கமலநாதன், பேராக் மாநில ம.இ.கா. தலைவர் டத்தோ வ. இளங்கோ, பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. கோகிலவாணி முனியாண்டி, கோப்பெங் தொகுதி ம இ கா தலைவர் திரு. சுப்பிரமணியம் திருப்பதி, உட்பட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர், உறுப்பினர்கள், ம இ கா தலைவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.