14-வது பொதுத்தேர்தலுக்கான கேந்திர பயிற்சிப்பட்டறை (RETREAT)

14-வது பொதுத்தேர்தலுக்கான கேந்திர பயிற்சிப்பட்டறை (RETREAT)

December 17, 2017

நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் ம இ கா வேட்பாளர்கள்  வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்யும் நோக்கிலும் நாடு முழுமையிலுள்ள இந்திய வாக்காளர்களின் வாக்குகளை தேசிய முன்னணி ஆதரவாகத் திரட்டும் நோக்கிலும், ம இ கா நேற்று சனிக்கிழமை (16 டிசம்பர் 2017) தேசிய நிலையிலான  14வது பொதுத் தேர்தலுக்கான ஆயுத்தப் பணிகள் தொடர்பான சிறப்புப் பட்டறையை நடத்தியதாக ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

 

சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள விவசாயக் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்புப் பட்டறையில் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் சுமார் ஏழு பேர் வீதம் என ஏறத்தாழ ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

“நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், தேர்தலை நேர்த்தியான முறையில் எதிர்க்கொள்ளும் வகையில் தேர்தல் நடவடிக்கை அறையை அமைப்பது, வாக்காளர்களை அடையாளம் காண்பது போன்றவை குறித்தும் துல்லிதமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் டாக்டர் சுப்ரா  தெரிவித்தார்.

 

தற்போது ம இ கா, நாடு முழுவதும் இந்திய சமூகத்துடனான உறவுப் பாலம் எனும் தலைப்பிலான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த நிகழ்ச்சிகளின் வழி பெறப்பட்ட மக்கள் கருத்துகளும் ஆய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராளர்கள் கூட்டத்தின் அதிகாரபூர்வ தொடக்கத்திற்குப் பின்னர் ஆறு குழுக்களாகப் பிரிந்து, தனித்தனி பட்டறைகளில் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.