“இந்தியர்களுக்கு 7 சதவீத குத்தகை வாய்ப்பு” மஇகா தொடர்ந்து வலியுறுத்தும்

“இந்தியர்களுக்கு 7 சதவீத குத்தகை வாய்ப்பு” மஇகா தொடர்ந்து வலியுறுத்தும்

December 03, 2017

மலேசிய இந்திய தொழில் முனைவர்கள் அரசாங்க குத்தகைகளில் குறைந்தது ஏழு விழுக்காட்டைப் பெறுவதை உறுதிச் செய்ய ம இ கா அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்திவரும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நாட்டின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வரைவு தொடர்பாக மலேசிய இந்திய சமுதாய கோரிக்கைகள் குறித்து தாம் பிரதமருடன் நடத்திய சிறப்புச் சந்திப்பின் போது இதர விவகாரங்களோடு இவ்விவகாரம் குறித்தும் பேசியதாகவும், குத்தகைகள் வழங்குவதில் அரசாங்கத்தின் உள்ள சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக பிரதமர் இதுதொடர்பான அறிவிப்பை செய்ய இயலாமல் போனது என சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா தெளிவுப் படுத்தினார்.

இருப்பினும், நிதியமைச்சு சிறப்புக் குழுவை அமைத்து இந்திய தொழில் முனைவர்களுக்கு குத்தகைகள் வழங்குவது குறித்து ஆராயும்படி தாம் நிதியமைச்சருமான பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தியிருப்பதாக டாக்டர் சுப்ரா மேலும் கூறினார்.

நேற்று சனிக்கிழமை (02 டிசம்பர் 2017) இன்று, கோலாலம்பூர் மெஜஸ்டிக் தங்கும் விடுதியில் 2017 ஆம் ஆண்டுக்கான பெர்டானா இந்திய இளம் தொழில் முனைவர் விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டபோது டாக்டர் சுப்ரா இதனை தெரிவித்தார்.

 

இந்திய தொழில் முனைவர்கள் பற்றி பேசிய அமைச்சர், உலகளாவிய நிலையில் தற்போது தொழில் துறை பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள தொழில் முனைவர்கள் அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

12 வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலருக்கு பெர்டானா இளம் தொழில் முனைவர் விருதுகள் வழங்கப்பட்டன. டாக்டர் சுப்ரா இந்த விருதுகளை எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பிரமுகர்கள், இந்திய தொழில் முனைவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.