ம இ காவின் கோரிக்கைகளுக்கு பிரதமர் ஒப்புதல் – டாக்டர் சுப்ரா நன்றி!

ம இ காவின் கோரிக்கைகளுக்கு பிரதமர் ஒப்புதல் – டாக்டர் சுப்ரா நன்றி!

ம இ காவின் 71 வது தேசியப் பொதுப் பேரவையில் இந்திய சமுதாயத்தின் நலன் கருதி தாம் முன்வைத்த பல கோரிக்கைகளுக்குப் பிரதமர் தமதுரையில் கொள்கை அளவில் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு தாம் ம இ காவின் சார்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார். குறிப்பாக, அரசாங்கம் அறிவித்துள்ள இந்தியர்களுக்கான பத்தாண்டு வியூக செயல் திட்டம் வெற்றிப்பெற அரசாங்க அமலாக்கக் கொள்கைகளில், சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படுவது அவசியமாகும் என தாம் முன் வைத்த கோரிக்கைக்குப் பிரதமர் கொள்கை அளவில் ஒப்புதல் அளிப்பதாக கூறியுள்ளார்.


இதன்மூலம், இந்தியர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கிவரும் அடையாள ஆவணங்கள் பெறுவது, வேலை வாய்ப்பு, அரசாங்க உயர்க் கல்வி வாய்ப்பு, உயர்க் கல்வி நிதி, வீட்டுடமை, அரசாங்க குத்தகைகள் போன்றவற்றைப் பெறுவதில் உள்ள அரசாங்க நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டால் அவற்றைப் பெறுவதில் எவ்வித சிரமமும் இருக்காது என சுகாதார அமைச்சருமான அவர் தெளிவுப்படுத்தினார். இவ்விவகாரம் தொடர்பாக தாம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் விரைவில் பேச்சு நடத்த விருப்பதாகவும், குறிப்பாக துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியைச் சந்திக்கவிருப்பதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர், புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற ம இ காவின் 71வது தேசியப் பொதுப் பேரவையின் இடைவேளையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தி்ல் டாக்டர் சுப்ரா இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பொதுத் தேர்தல் குறித்துப் பேசிய அமைச்சர், ம இ கா கடந்த முறையைப் போலவே இம்முறையும் 9 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 19 சட்டமன்ற இடங்களிலும் போட்டியிடும் என்றும், ம இ காவுக்கு அத்தொகுதிகள் தேசிய முன்னணியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அதிகாரப் பகிர்வு முறையின் கீழ் வழங்கப்பட்டுள்ளதால் அத்தொகுதிகளை ம இ கா யாருக்கும் விட்டுக் கொடுக்காது எனவும் டாக்டர் சுப்ரா மீண்டும் தெளிவுப்படுத்தினார்.
மதமாற்று விவகாரம் குறித்தும் டாக்டர் சுப்ரா கருத்துரைத்தார். இவ்விவகாரத்தில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். ம இ கா இவ்விவகாரத்தை முக்கியமான ஒன்றாக கருதுவதாக கூறினார். இவ்விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வுக் காண ம இ கா முயற்சிகள் எடுத்து வருகிறது என்றார் அவர். சிறந்த தேர்ச்சி இருந்தும் அரசாங்க பொதுப் பல்கலைக் கழகங்களில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் தமதுரையில் செய்த அறிவிப்புக்கும் டாக்டர் சுப்ரா நன்றி தெரிவித்துக் கொண்டார்.