71-வது மஇகா பொதுப் பேரவையில்
மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்
ஆற்றிய தலைமை உரை

மாண்புக்கும், மரியாதைக்கும் உரிய, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களே!
தேசிய முன்னணி அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களே!

வருகை தந்திருக்கும் பிரமுகர்களே!
மஇகாவுக்கென நேரம் ஒதுக்கி இன்று எங்களின் பொதுப் பேரவைக்கு வருகை தந்து எங்களைப் பெருமைப்படுத்தியிருக்கும் உங்கள் அனைவரையும் மஇகாவின் சார்பில் இருகரம் கூப்பி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தங்களின் வருகைக்கு நன்றியும்

Image may contain: 7 people, people smiling, people standing

தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு அடித்தளமாக, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையோடு கூடிய உறுதிப்பாடு, நமது அரசியல் நட்புறவில் தொடர்ந்து பேணப்பட்டு வரும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு இன்னொரு உதாரணமாக, இன்றைய நமது மஇகா மாநாடு திகழ்கிறது.
தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான நட்புறவையும், புரிந்துணர்வையும் நாம் மிகவும் பொறுப்புடனும், தீவிர அக்கறையுடனும் பேணிப் பாதுகாத்து வருகிறோம் என்பதற்கான அடையாளம் இன்றைய மஇகா மாநாடாகும்.

சுதந்திரம் பெற்றது முதல் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையே நிலவி வரும் அதிகாரப் பகிர்வு முறை ஆட்சியமைப்பின் மீது நாம் கொண்டுள்ள கடப்பாடுதான், நாடு இந்த அளவுக்கு முன்னேற்றமும், வளர்ச்சியும் பெற்றதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன. எதிர்கால மலேசியாவின் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும், இதுவேதான் காரணங்களாகவும் அமையப் போகின்றன. நாட்டை இன்னும் உயரிய நிலைமைக்கு கொண்டு செல்லப் போகின்றன என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

வெளியுறவுக் கொள்கை
மாண்புமிகு பிரதமர் அவர்களே!
அனைத்துலக அரங்கில் ஒரே நாட்டை மட்டும் சாராமல், ஒரே அணியைச் சேர்ந்த நாடுகளுடன் மட்டும் சார்ந்திருக்காமல், மலேசியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுத்துச் செயல்படுத்தி வரும் தங்களின் தூரநோக்கு சிந்தனைக்கு நான் பாராட்டு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் நமது நாடு அனைத்துலக அரங்கில் பலதரப்பட்ட நாடுகளுடன் நட்பு பாராட்ட முடிவதோடு, அதிகார அணுக்கமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது.

குறிப்பாக, சீனாவுடன் தாங்கள் கொண்ட நெருக்கமான, அணுக்கமான வெளியுறவுக் கொள்கையின் காரணமாக, கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புடைய முதலீடுகளை மலேசியாவுக்குள் கொண்டு வந்திருக்கின்றது, என்பதுடன் நமது நாட்டுக்கு மிகவும் தேவையான அந்நிய முதலீடுகளை வெற்றிகரமாகப் பெற்றுத் தந்து நமது நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தருவதற்கான காரணியாகவும் அமைந்திருக்கிறது.

இருந்தாலும் சீனாவுடனான தங்களின் அணுக்கமான வெளியுறவுக் கொள்கை சில கண்டனங்களையும் கொண்டுவந்திருக்கின்றது. நாம் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுகிறோம் என்ற குறைகூறல்களையும் சிலர் முன்வைத்திருக்கின்றனர்.

ஆனால், அத்தகைய குறைகூறல்களை முறியடிக்கும் வண்ணம், இத்தகைய பார்வையை திருத்தி அமைக்கும் வண்ணம் தாங்கள் அண்மையில் அமெரிக்காவுக்கும் வருகை தந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்துலக அரங்கில் சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுடன் சரிசமமாக நெருக்கம் பாராட்டும் மலேசியாவின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி இருக்கிறீர்கள்.

இதுமட்டுமல்லாமல், மத்திய கிழக்கின் சக்தி வாய்ந்த நாடுகளான சவுதி அரேபியா போன்ற நாடுகளுடன் நட்பு பாராட்டியதன் காரணமாக, சவுதி மன்னர் தனது குழுவினரோடு நமது நாட்டுக்கு வருகை தந்தார்.
உலக அரங்கில் மற்றொரு முக்கிய நாடான இந்தியாவுக்கும் தாங்கள் வருகை மேற்கொண்டபோது, தங்களுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான நெருக்கம், பரஸ்பர நட்புறவு ஆகிய அம்சங்களை அருகிலிருந்து நேரடியாகக் கவனிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இத்தகைய பல்வேறு கோணங்களில் மாறுபட்ட, வெளியுறவுக் கொள்கைகளால் முரண்பட்ட நாடுகளுடன் மலேசியா சார்பில் தாங்கள் முயற்சி எடுத்து, வடிவமைத்துக் கொண்டிருக்கும் வெளியுறவுக் கொள்கைகள் அனைத்து வல்லரசு நாடுகளின் நட்பையும், நல்லுறவையும் நாம் பெறுவதற்கும் அனைத்துலக அளவில் அரசியல், பொருளாதார அம்சங்களில் மலேசியாவின் நிலைத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் உதவியுள்ளன.

தங்களின் இந்திய வருகையின்போது தங்களின் குழுவில் இடம் பெற்றிருந்த நான், அங்கு நடைபெற்ற பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களில் கலந்து கொண்டதோடு, இந்தியாவுக்கும் நமக்கும் இருக்கும் பாரம்பரியமான, வரலாற்றுபூர்வமான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வண்ணமும், நமது சமூக, கலாச்சார, பொருளாதாரத் துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேலும் விரிவாக்கும் வண்ணமும் மேற்கொள்ளப்பட்ட செயல் நடவடிக்கைகளில் பங்கு பெறும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இதே பாணியில் பல்வேறு தருணங்களில், தளங்களில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியும், மலேசிய இந்திய சமுதாயத்தின் பல்வேறு தரப்பட்ட தலைவர்களும், இந்தியாவின் பல்வேறு நிலைகளிலான அமைப்புகள், தலைவர்களுடன் அரசியல், பொருளா

தாரம், சமூகம், கலாச்சாரம், மொழி போன்ற முனைகளில் தொடர்புகளையும், கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக, நான் தமிழகத் தலைநகர் சென்னைக்கு வருகை மேற்கொண்டிருந்தேன். நமது நாட்டில் தமிழ்க் கல்வி தொடர்ந்து 200 ஆண்டுகளாக நிலைத்து, நீடித்து வருவதைக் கொண்டாடும் விதமாகவும், நமது நாட்டில் தமிழ்க் கல்வியை மேலும் தொடர்ச்சியாக வளப்படுத்தும், வலிமைப்படுத்தும் விதமாகவும், தமிழக அரசின் ஆதரவுடன், தமிழக அமைச்சர்களின் முன்னிலையில் இந்தியாவின் பெருமை வாய்ந்த, பழமையான சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பும் எனக்கு வழங்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின் மூலமாக, நமது நாட்டில் தமிழை வளர்ப்பதற்கும் தமிழ்க் கல்வியை விரிவாக்குவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது இணக்கமாகவும், அணுக்கமாகவும் இருக்கும் சமூக, கலாச்சார ரீதியான நட்புறவின் அடிப்படையில், மொழி நிபுணர்களின் பங்களிப்பை வழங்கவும், தேவையான சாதனங்கள் மற்றும் நூல்களை வழங்கவும் தமிழக அரசு உதவுவதற்கு உறுதியுடன் முன்வந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தங்களின் முன்னிலையில் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

Image may contain: 11 people, people smiling, people standing

அதே போன்று தங்களுடனான இந்திய வருகையின் போது, மலேசியா-இந்தியா இருநாட்டு உறவுகளும் வலுப்பட, பல்வேறு பரிந்துரைகளும் திட்டங்களும் செயலாக்கப்பட நாம் பேச்சு வார்த்தைகள் நடத்தினோம் என்பதையும் இந்த இடத்தில் நான் நினைவு கூர விரும்புகிறேன். அவை செயல்வடிவம் பெறக் கூடியவை என்பதோடு, தற்போது எழுத்து வடிவில் மட்டும் பதியப் பட்டிருக்கும் அவை உண்மையிலேயே செயல்படுத்தப்படக்கூடிய ஆற்றல் கொண்டவை. அவ்வாறு செயல்படுத்தப்பட்டால், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுப் பாலம் மேலும் வலிமையாகும், பல்வேறு முனைகளிலான பரிமாற்றங்களும் அதிகரிக்கும் என வலியுறுத்த விரும்புகிறேன்.